ஆனந்தக்கண்ணன் எனும் தோழன்…
சிறந்த கலை நோக்கும், உயர்ந்த பண்பும், தலைக்கனமற்ற எளிமையும், தான் தேர்ந்தெடுத்தக் கலை ஊடகத்துறையில் கடுமையும் திறமையுமான உழைப்பும், எவரிடமும் நற்பெயரை மட்டுமே தனக்குரித்தானதாய் கொண்ட பேராண்மை மிக்கவர் ஆனந்தக்கண்ணன். நாடகம் - ஊடகம் - நடிப்பு - தொலைக்காட்சி- சினிமா - தமிழர் தொன்மக் கலைகளில் பயிற்சியும், பயிற்றுவிப்புமாய்… கலை , மேடை நிகழ்த்துகலை என முழுவதும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
90களில்ரவீந்திரன் நாடகக்குழுவில் நான் ஒரு சில நாடகங்களில் பங்குபெற்றபோது, எனக்கு அறிமுகமான நண்பர் கண்ணன். வடி, செல்வா, ரவிவேலு, ராஜேஷ்கண்ணா ,கோபு , நாகராணி ,கிரேஸ் கலைச்செல்வி, பாலகுமாரன் , வீரராகவன்,லோகன் , எனஅந்தக்குழுவில் கன்னக் குழிவிழும் புன்னகைக்குச் சொந்தக்காரர் அழகன் ஆனந்தக்கண்ணன். பிறகு, தமிழ் நிகழ்வுகளில் எங்கு சந்திப்பினும் ‘ நெப்போலியன் எப்டி இருக்கீங்க ‘ என மனைவி நாகராணியுடன் நலம் விசாரிக்கும் நல் உள்ளக்காரர். சிங்கப்பூரில் முகமது அலியின் தயாரிப்பில் ஒரு டெலிபிலிம்மில் சுரேஷ்மேனன் இயக்கத்தில் நான் , நடிகை ஐஸ்வர்யா , கிருஷ்ணசாமி பாலன், மேலும் உள்ளூர்க் கலைஞர்கள் நடித்தபொழுது அப்படைப்பு முழுவதும் திரைக்கதை இணைஇயக்கம் என ஆனந்தக்கண்ணனின் பங்கு மிகவும் காத்திரமும் , முக்கியமுமானது . படப்பிடிப்பின் நாட்களில் சினிமாவைப் பற்றி கண்ணனும் நானும் நிறைய பேசியிருக்கின்றோம். ஒரு நல்ல சினிமாவின் நாயகனுக்கான அனைத்து அம்சங்களையும் தன்னிடத்தே கொண்டிருந்தவர் நண்பர் ஆனந்தக்கண்ணன். திரை இயக்கத்திலும் அவருக்கு கனவும் ஆர்வமும் இருந்தது. பலவருடங்களுக்குப் பிறகு 2000த்தில், “காதலில் விழுந்தேன் “ திரைப்படப் பாடலுக்காக சென்னையில் இருந்தபொழுது , சத்யம் திரையரங்கச் சாலையருகே நானும் கண்ணனும் எதிரெதிரே சந்தித்துக் கொள்கிறோம் . அப்பொழுது அவர் சன்மியூசிக்கில் ஸ்டார் தொகுப்பாளராக மிகப்பிரபலம். இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொள்கிறோம்… எனது சினிமாவைப்பற்றியும் - அவர் நடிக்க இருக்கும் படத்தைப் பற்றியும் சொன்னார். பிறகு அவர் வசித்துவந்த அபார்ட்மெண்ட்க்கும் அழைத்துச் சென்று , தமிழர் கலைகளான கரகம், சிலம்பம் போன்றவற்றை கற்று வருவதாகக் கூறுகிறார்… பிறகு பல வருடங்கள் மீண்டும் சிங்கையில் பல்வேறு தமிழ் நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வோம். ஒரு திருமண நிகழ்வில் எனது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்… பிறகு அவரது ஏகேடி குழுமம் மூலம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு தமிழ்க் கலை நிகழ்வுகள் - தொலைக்காட்சிப் படைப்புகள் என பல்வேறு பணிகளை வெற்றிகரமாய் தொடர்கிறார். கண்ணனை அவர் மனைவி நாகராணியுடன் கடைசியாய் சந்தித்துப் பேசியது, ஒரு சில மாதங்களுக்கு முன்பு அருமை நண்பர் சுப. அருணாச்சலம் அவர்களின் மறைவு அரங்கில்தான் , சிங்கப்பூரில் அரிதாகவும் மிக அருமையாகவும் வந்துகொண்டிருந்த தவமணியின் “ துருவங்கள் “ தொலைக்காட்சித் தொடரைப் பற்றி பேசிக்கொண்டோம் ராஜேஸ்கண்ணாவுடனும் அவருடனும்.
இன்று 20/8/2021 முகநூலில் அவரது தந்தையார் மாகோ பதிவிட்டிருக்கும் அவரது அன்பு மகனின் குதிரையேற்றப் புகைப்படம் “ கண்ணனின் புறப்பாடு “ தான் சார்ந்த கலை உலகின் எல்லோர் மனதிலும் அன்பின் ஆழ்ந்த ஈரமாய் கலை வெற்றிக் குதிரை வீரனாய் ஆனந்தக்கண்ணன்…உண்மை யாரலும் மறுக்க முடியாது கண்ணன். சென்றுவாருங்கள்.. உங்களது கலைப் படைப்புகள் காலம் அழிக்க முடியா வாழ்வாங்கு முடிவிலியாய் இம்மண்ணில் பல்வேறு பிரதிபலிப்புகளாய் தொடரும்…அதன் ஒவ்வொரு பிரதியிலும் உங்கள் முகமும் இருக்கும்..
கண்ணன் என்றுமே ஆனந்தமானவன் கண்ணன் என்றுமே கலங்கமில்லாதவன் கண்ணன் என்றுமே கலைகளுக்கானவன்
கண்ணன் என்றுமே
காற்றில் இசையாயிருப்பவன்
கண்ணன் என்றுமே
மயிற்தோகை மகிழ்வானவன்
கண்ணன் என்றுமே நிரந்தனமானவன் ஆனந்தக் கண்ணன்
என்றும் நம்முள் கலையாய் வாழ்பவன்…
- கவிஞர் நெப்போலியன், சிங்கப்பூர்.